பல்வேறு இடங்களில் உள்ள திருப்பதி ஆலயம் தற்போது ஜம்முவில் உதயமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருப்பதி ஏழுமலையான் கோவில் பல்வேறு இடங்களில் காணப்பட்டு வருகிறது. ஜம்மு-காஷ்மீர் அரசு இந்த கோயில் கட்டுவதற்காக தனியாக ஒரு நிலத்தை ஒதுக்கி வைத்துள்ளது. நாட்டில் பல்வேறு இடங்களிலும் திருப்பதி, ஏழுமலையான் கோயில் கட்டுவதற்கான பணியைத் தொடங்கியுள்ளது. இந்த திருமலை திருப்பதி தேவஸ்தானம், வட இந்தியாவில் மும்பை, ரிஷிகேஷ், குருஷேத்திரம், புதுடெல்லி ஆகிய இடங்களில் ஏற்கெனவே ஏழுமலையான் கோயிலைக் கட்டியுள்ளது. அதோடு நிற்காமல் தற்போது ஹைதராபாத், அமராவதி, ஒடிஸா, ஜம்மு, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கோயில் கட்டும் பணியில் முயற்சி செய்து வருகிறது.
இந்நிலையில் ஜம்முவில் உதயமாக உள்ள திருப்பதி ஆலயம் கட்டப்பட இருக்கும் இடத்திற்கு சென்று திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி ஆய்வு செய்துள்ளார். அப்போது அங்குள்ள ஜம்மு அதிகாரிகளுடன் பேசிய சுப்பா ரெட்டி, “தேவஸ்தான பொறியாளர்கள் நேரில் வந்து பார்வையிட்டு, நிலத்தைப் பரிசோதித்து, கோயில் கட்டுவதற்கான திட்ட வரையறையைத் தயார் செய்வார்கள்” என்று தெரிவித்தார். இந்த ஆய்வின்போது ஜம்மு கலெக்டர் திருமதி சுஷ்மா, மாவட்ட மேம்பாட்டு அதிகாரி ரமேஷ் சந்தர், கூடுதல் இணை இயக்குனர் ஷாம் சிங், உதவி இயக்குனர் ராகேஷ் துபே போன்ற அதிகாரிகளும் இருந்தனர்.