எஸ்பி அலுவலகத்தில் ஒரே நாளில் இரண்டு காதல் ஜோடிகள் உயிருக்கு ஆபத்து என்று தஞ்சம் புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பவுன்குமார்- விஜி என்ற திருமணமான காதல் ஜோடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உயிருக்கு பாதுகாப்பு வேண்டி தஞ்சமடைந்துள்ளனர். இது தொடர்பாக விஜி கூறுகையில் “நாங்கள் இருவரும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வருகிறோம். சமீபத்தில் வேறொரு பையனுடன் எனக்கு திருமணம் செய்து வைக்க என் பெற்றோர் தீர்மானித்ததால் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். நாங்கள் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள் எங்களுடைய திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் என்னுடைய குடும்பத்தினர் பவுன்குமார் வீட்டின் மேல் கூரையை அடித்து உடைத்துள்ளனர். எங்கள் இருவருக்கும் என் குடும்பத்தினர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதால் கடந்த மூன்று நாட்களாக தலைமறைவாகி வாழ்ந்து வருகிறோம். மேலும் என் கணவரின் குடும்பத்தினரின் உயிருக்கும் பாதுகாப்பு வேண்டி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் திருவண்ணாமலை மாவட்டத்திலே பொற்குணம் கிராமத்தைச் சேர்ந்த சினேகா-முரளி இருவரும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கலசபாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 25ஆம் தேதி பதிவு திருமணம் செய்து கொண்டனர். இச்சூழலில் சினேகாவின் தந்தை முருகன், முரளி தனது மகளை கடத்திசென்று விட்டதாக புகார் அளித்துள்ளார். ஆனால் சினேகா முரளி தன்னை கடத்தவில்லை என்றும், தனது விருப்பதுடன்தான் திருமணம் செய்து கொண்டார் என்றும் கூறியுள்ளார். மேலும் என்னுடைய தந்தையால், எங்கள் இருவரின் உயிருக்கும் ஆபத்து எனவும் அதேபோல எனது கணவரின் குடுப்பதினரின் உயிருக்கும் ஆபத்து எனவும் கூறியுள்ளார். நாங்கள் சேர்ந்து வாழ விரும்புகிறோம் ஆதலால் எங்கள் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சமடைந்துள்ளதாக கூறியுள்ளனர். ஒரே மாவட்டத்தில் இருவேறு பகுதிகளை சேர்ந்த காதல் ஜோடிகள் தந்தையால் தங்கள் உயிருக்கு ஆபத்து என்று காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.