மனவளர்ச்சி குன்றிய இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மன வளர்ச்சி குன்றிய இளம் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை கைது செய்யக்கோரி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் சென்னை டி.பி சத்திரத்தில் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோரிக்கை மனு ஒன்றையும் கீழ்ப்பாக்கம் துணை ஆணையரிடம் கொடுத்தனர். அந்த மனுவில்” சென்னை டி.பி சத்திரம் பகுதியில் உள்ள தெருவோர குடிசையில் 22 வயதான மனவளர்ச்சி குன்றிய மகளுடன் ஒரு தாய் வசித்து வருகிறார். கடந்த 13 ஆம் தேதி இரவு இளம்பெண் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது லிங்கன் என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து தாயின் கண்முன்னே அந்த மனவளர்ச்சி குன்றிய இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்முறை செய்துள்ளனர்.
இச்சம்பவம் நடந்து 4 மணி நேரத்தில் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தாயும் மகளும் புகார் கொடுத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் புகார் அளித்து ஒன்பது நாட்களாகியும் காவல்துறையினர் குற்றவாளியை கைது செய்யாததால் லிங்கனும் அவரின் நண்பர்களும் சுதந்திரமாக வெளியில் நடமாடுகின்றனர். எனவே குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் அத்துடன் வழக்கு முடியும்வரை அந்தப் பெண்ணுக்கு பாதுகாப்பு வழங்குவதோடு உடனடியாக உயர் மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு பெற்றுக் கொடுக்க வேண்டும். தனிமையில் வாழும் அவர்களுக்கு அரசு குடியிருக்க வீடு ஒதுக்கவேண்டும்.” என்று குறிப்பிட்டிருந்தது.