கொரோனா தொற்றால் உயிரிழந்த வசந்தகுமார் மரணத்திற்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்
கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் வசந்த் குமார் இன்று உயிரிழந்தார். இது பலருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரின் மரணத்திற்கு பிரதமர் உட்பட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கானா மாநில ஆளுநரும், முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில் சித்தப்பா நீங்கள் இல்லை என்பதை என் மனது நம்ப மறுக்கிறது. என் சிறுவயது முதல் அவருக்கு திருமணம் வரை ஒன்றாக வளர்ந்தோம். அப்பா குமரி அனந்தனின் அரசியல் தாக்கம் 2 பேரிடம் இருந்தது. ஆனால் வேறு வேறு பாதையில் பயணித்தோம். இயக்கம் வேறாக இருந்தால் இணக்கமாக இல்லையே.. தவிர ரத்தபாசம் இருவரிடமும் உண்டு. தூரத்தில் இருந்தே அவரின் சுறுசுறுப்பையும், துறுதுறுப்பையும் கண்டு வியந்திருக்கிறேன்.
— Dr Tamilisai Soundararajan (மோடியின் குடும்பம் ) (@DrTamilisaiGuv) August 28, 2020
சிறுவயதில் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டது, சண்டையிட்டது எல்லாம் நினைவிற்கு வருகிறது. வசந்த் அன் கோ என்ற சாம்ராஜ்யத்தை உருவாக்கி பல பேருக்கு பணி கொடுத்த தருமம் கூட காப்பாற்ற வில்லையே என்று மனம் பதைபதைக்கிறது. கண்டிப்புடன் கண்ணீரை அடக்க முயற்சித்தாலும், கரைபுரண்டு கண்ணீர் பெருகுகிறது . ஆளுநராக இருந்தாலும் அண்ணன் மகளாக அழுது கொண்டிருக்கிறேன் என்று உருக்கமாக செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார்.