தமிழகத்தில் மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது என்று அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதும் கொரோனா பரவலால் ஊரடங்கு மார்ச் 25 முதல் பிறப்பிக்கப்பட்டது. இருந்து கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்த நிலையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு வருகின்றன. தற்போது மூன்றாம் கட்ட தளர்வு நாடு முழுவதும் அமலில் இருந்து வருகின்றது. நாளை மறுநாள் 31 ஆம் தேதியோடு மூன்றாம் கட்ட தளர்வு நிறைவடைய இருக்கும் நிலையில், மேலும் எந்த மாதிரியான நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று மாநில அரசுகள் ஆலோசித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை மேற்கொண்டார். மாவட்ட அளவில் கொரோனா பாதிப்பு குறித்தும், கட்டுப்படுத்த எந்த மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் ? என்றும், எப்படியான தளர்வுகளை அறிவிப்பது என்பது தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசித்தார்.அதைத் தொடர்ந்து தற்போது மருத்துவ குழுவினருடன் முதல்வர் ஆலோசித்து வருகிறார்.
தமிழகத்தில் கடைகள் திறக்கப்படும் நேரம், மெட்ரோ சேவையை சென்னையில் அனுமதிக்கலாமா வேண்டாமா ? இ-பாஸ் முறையை ரத்து செய்யலாமா வேண்டாமா ? என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதற்கான அறிவிப்பு இன்று மாலை வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் தமிழகத்தில் மேலும் ஊரடங்கு நீட்டித்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்க வாய்ப்பு இருக்கின்றது என்று அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.