செப்டம்பர் மாதம் மாணவர்கள் எழுத இருக்கும் நீட் மற்றும் ஜெஇஇ தேர்வுகளுக்கு பேருந்து மற்றும் விடுதி இலவசமாக வழங்கப்படும் என ஒடிசா தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல தடைகள் விதிக்கப்பட்டு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கு காலகட்டத்தில் மாணவர்களுக்கான தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டும், ஒத்திவைக்கப்பட்டும் உள்ளன. ஆனால் நீட் மற்றும் ஜெஇஇ தேர்வுகளுக்கு எந்த ஒரு விலக்கும் தரமுடியாது என உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் சொன்னபடி செப்டம்பர் 13 இல் தேர்வுகள் நடைபெறும் என அரசாணை வெளியிட்டு இருந்தது.
இந்த நிலையில் நாடு முழுவதும் JEE முதன்மை தேர்வுகள் செப்டம்பர் 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மேலும் ஒடிசா மாநிலத்தில் மட்டும் 7 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களிலிருந்து 37 ஆயிரம் மாணவர்கள் இந்த தேர்வை எழுத இருக்கின்றனர். இந்நிலையில் 37 ஆயிரம் மாணவர்களுக்கும், மாணவர்களை தேர்வு எழுத அழைத்து வரும் அவர்களது பெற்றோருக்கும் இலவசமாக பேருந்து மற்றும் தங்குமிட வசதி ஏற்படுத்தி தரப்படும் என ஒடிசா தலைமை செயலாளர் அசிட் திரிபாதி அறிவித்துள்ளார். இது மட்டும் இல்லாமல் செப்டம்பர் 13ம் தேதி நடைபெறும் நீட் தேர்வுக்கும் இதே போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட இருக்கின்றன.