விறகு சேர்க்க சென்ற பெண்ணை விஷப் பாம்பு கடித்து உயிர் இழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பல்லாவரம் பகுதிக்கு அடுத்துள்ள திருநீர்மலை தெற்கு மாட வீதியை சேர்ந்தவர் அனிதா. இவர் சமைப்பதற்காக அப்பகுதியில் இருந்த விறகுகளை சேகரிக்கும் போது அதிலிருந்து விஷப்பாம்பு அவரை கடித்துள்ளது . சிறிதும் இதை உணராது அனிதா தன் வேலையிலேயே மும்மரமாக ஈடுபட்டுள்ளார். சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு அவர் மயங்கி விழுந்துள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அனிதாவை உடனடியாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர்.
அவரைப் பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதைதொடர்ந்து அனிதா விறகு எடுத்த இடத்தை அவரது உறவினர்கள் சென்று பார்த்தபோது அதில் பாம்பு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அனிதா பாம்பு கடித்து உயிரிழந்துள்ளார் என்பதை அப்போதுதான் அவர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த தகவலை அறிந்து வந்த சங்கர் நகர காவல் துறையினர் அனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.