அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனாவை கண்டு அச்சமடைந்து உள்ளார் என துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் அதிபர் மற்றும் துணை அதிபர் தேர்தலுக்காக போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இருவரும் மாறி மாறி விமர்சனம் செய்து வருகிறார்கள். அந்த வகையில், அமெரிக்க மக்களை பாதுகாக்கும் விவகாரத்தில் அதிபர் டிரம்ப் தோல்வியடைந்துவிட்டார் என்று துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரீஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
வாசிங்டனில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய கமலா ஹாரிஸ், கொரோனாவை கண்டு டிரம்ப் பயந்து உள்ளார் என்றும், கொரோனா பரவலால் உருவாகியுள்ள பிரச்னையை சரி செய்வதை பாராமல், பங்கு சந்தைகளில்தான் கவனம் செலுத்தி வருகிறார் என்றும் விமர்சனம் செய்துள்ளார். மேலும் கொரோனா பிரச்னையில் கவனம் செலுத்தினால் அது பங்கு சந்தைகளில் பாதிப்பை ஏற்படுத்தி விடும், இதனால் தன்னால் மீண்டும் அதிபராக முடியாது என்ற காரணத்தால் தான் டிரம்ப் இவ்வாறு நடந்து கொள்கிறார் என்றும் கமலா ஹாரீஸ் விமர்சித்துள்ளார்.