மகள் என்றும் பாராமல் தூங்கிக்கொண்டிருந்த சிறுமியின் தலையை வெட்டிக் கொலை செய்த தந்தைக்கு கொடுக்கப்பட்ட தண்டனை நாட்டு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது
ஈரானில் டலஸ் பகுதியை சேர்ந்த ரோமினா என்னும் 14 வயது சிறுமி 35 வயதுடைய நபரை காதலித்து வீட்டை விட்டு ஓடி உள்ளார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் சிறுமியை மீட்டு வீட்டிற்கு செல்ல அறிவுறுத்திய நிலையில் சிறுமி தந்தைக்கு பயந்து வீட்டிற்கு செல்ல மறுத்துள்ளார். ஆனாலும் போலீசார் வீட்டில் சிறுமியை சேர்த்துள்ளனர். இந்நிலையில் தனது பேச்சை மீறி வீட்டை விட்டு ஓடிய தனது மகள் தூங்கிக்கொண்டிருந்த சமயம் தந்தை கொடூரமாக தலையை வெட்டிக் கொலை செய்துள்ளார். அதோடு கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்துடன் காவல்நிலையத்திற்கு நேராக சென்று சரணடைந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து கைதுசெய்யப்பட்ட அவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என சிறுமியின் தாய் உட்பட அந்நாட்டு மக்களும் வலியுறுத்தினர். ஆனால் அவருக்கு நீதிமன்றம் ஒன்பது வருடங்கள் சிறை தண்டனை மட்டுமே விதித்தது. இந்த தீர்ப்பு குறித்து கூறிய சிறுமியின் தாய் கூறுகையில், “எங்கள் கிராமத்திற்கு மீண்டும் என் கணவர் திரும்புவதை நான் சிறிதும் விரும்பவில்லை. எனவே தீர்ப்பை மறுபரிசீலனை செய்து அவருக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும். 15 வருடங்கள் அந்த மனிதனுடன் நான் வாழ்ந்துவிட்டேன்.
எனக்கு அவரைப்பற்றி நன்றாகத் தெரியும். நீதிமன்றம் அளித்திருக்கும் இந்த தீர்ப்பினால் எனது குடும்பத்தினருக்கு பெரும் ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என அச்சத்துடன் தெரிவித்துள்ளார். குற்றம்சாட்டப்பட்டவர் பாதுகாவலர் என்ற காரணத்தினால் இஸ்லாமிய தண்டனை சட்டத்தின் அடிப்படையில் அவருக்கு வழங்கப்பட இருந்த கடுமையான தண்டனையிலிருந்து விலக்களிக்கப்பட்டு ஒன்பது வருடங்கள் மட்டுமே சிறை தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தீர்ப்பானது நாட்டு மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.