இன்று மட்டும் தான் தளர்வில்லா ஞாயிற்றுக்கிழமை கடைபிடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தமிழகத்தில் கொரோனா பரவலை அடுத்து மத்திய அரசு வெளியிடும் வழிகாட்டி நெறிமுறைகளுக்கு தகுந்தவாறு பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசு விதித்து வருகிறது. குறிப்பாக ஊரடங்கு தளர்வு பிறப்பிக்கப்பட்ட இந்த கால கட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை தளர்வுகள் இன்றி முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தவறாமல் பின்பற்றப்படும் இந்த பொதுமுடக்கம் இன்றும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது,.
நாளையோடு பொதுமுடக்க மூன்றாம் கட்ட தளர்வு முடிவடைய இருக்கும் நிலையில், மத்திய அரசு நேற்று நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. அதில் பல்வேறு அம்சங்களில் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. குறிப்பாக மாநில அரசுகள் சுயேச்சையாக பொது முடக்கம் குறித்து எந்த முடிவையும் எடுக்கக் கூடாது.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொதுமுடக்கம் விதிக்கப்பட்டாலும் பிற பகுதிகளில் பொது முடக்கம் பிறப்பிக்க மாநில அரசு மத்திய அரசின் ஆலோசனையைப் பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டும் இருக்கும் தளரவில்லா பொதுமுடக்கம் ரத்து செய்யப்படுமா ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதனால் இன்று இருக்கும் ஞாயிற்றுக்கிழமை தான் கடைசி தளரவில்லா ஞாயிற்றுக்கிழமை என்று சொல்லப்படுகிறது. வரும் காலங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொதுமுடக்கம் இருக்க வாய்ப்பில்லை என்றும், இன்று தமிழகத்தில் பின்பற்றப்பட இருக்கும் நான்காம் கட்ட பொதுமுடக்க தளர்வு குறித்த அறிவிப்பில் இது குறித்த தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.