வேலூர் அருகே விவகாரத்து பெறும் முடிவில் இருந்த மனைவியை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற கணவனை போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.
வேலூர் அடுத்த பேரணாம்பட்டு பத்திரப்பல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் யுவராஜ். கட்டிட தொழிலாளியான இவர், தனது தாய்மாமன் மகளான சுப்புலட்சுமியை 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். திருமணமான நாள்முதலே கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் விவாகரத்து பெற்றுக்கொண்டு தாய் வீட்டுக்கே சென்றுவிடும் முடிவில் இருந்துள்ளார் சுப்புலட்சுமி. இந்த நிலையில் யுவராஜுக்கும், சுப்புலட்சுமிக்கும் நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த சுப்புலட்சுமி கனவனை செருப்பால் அடித்ததாக கூறப்படுகிறது. கோபத்தின் உச்சிக்கே சென்ற யுவராஜ், இரும்பு கம்பியால் மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த சுப்புலட்சுமி ரத்த வெள்ளத்தில் நிகழ்விடத்திலேயே சுருண்டு விழுந்துள்ளார். அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர், உயிருக்கு போராடிய சுப்புலட்சுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் யுவராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.