வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் நிலுவையில் வழக்கு உள்ள ரவுடி என்பது தெரியவந்தது.
வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வரும் பவித்ரன் என்பவர் சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர். கடந்த 27ஆம் தேதி இரவு வேலை முடித்து பச்சையப்பா கல்லூரிக்கு அருகே சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது இரண்டு சக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி 7000 ரூபாய் பணத்தையும் அவரின் செல்போனையும் பறித்து சென்றனர். இதுகுறித்து பவித்ரன் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அதில் பதிவான காட்சிகளை பார்த்தபோது, பழைய குற்றவாளிகலே இச்செயலை செய்திருப்பது தெரியவந்தது. பெரும்பாக்கம் பகுதியில் இவர்கள் இருவரும் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கீழ்பாக்கம் காவல்துறையினர் அவர்கள் இருவரையும் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் இருவரும் சோளிங்கநல்லூர் பகுதியை சேர்ந்த ரவுடி ஆதிபகவான் மற்றும் அவரது நண்பர் முகேஷ் என்பது தெரியவந்தது. மேலும் 2015 ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கு ஆதிபகவன் மீது நிலுவையில் உள்ளது. அவர்களிடம் இருந்த செல்போன், பட்டாக்கத்தி மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.