கல்லூரி முதல்வர் மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி வந்தது தைரியமிக்க மாணவியின் செயலால் வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது
உத்தரகாண்ட் மாநிலத்தில் இருக்கும் நைனிடால் மாவட்டத்தில் அமைந்துள்ள கல்லூரியின் முதல்வர் ஒருவர் மாணவிகளுக்கு ஆபாச குறுந்தகவல்களை அனுப்பியதாக வழக்கு பதிவாகியுள்ளது என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “கல்லூரி மாணவி அளித்த புகாரின் அடிப்படையிலேயே வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் கொடுத்த புகாரில் கல்லூரியின் முதல்வர் தகாத முறையில் நடந்து கொள்வதாக குறிப்பிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து நாங்கள் மேற்கொண்ட விசாரணையில் அந்த புகார் உண்மை என்பதும் உறுதியானது. கடந்த ஒரு வருடங்களாக கல்லூரியின் முதல்வரான பிரேம் பிரகாஷ் மாணவிகளுக்கு ஆபாச குறுந்தகவல்களை அனுப்பியதோடு போனில் பேசும் போதும் தவறாக பேசியது தெரியவந்தது. ஆனால் மாணவிகள் பயத்தினால் வெளியில் சொல்லாமல் அமைதியாக இருந்துள்ளனர். புகாரை பெற்றுக் கொண்ட நாங்கள் பாதிக்கப்பட்ட மாணவிகளின் வாக்குமூலத்தை பதிவு செய்துகொண்டு கல்லூரி முதல்வர் மீது எப்ஐஆர் பதிவு செய்தோம்.
அவர் மீது பெண்களுக்கு எதிரான குற்றவியல் தாக்குதல் அல்லது பயன்பாடு மற்றும் அவமதிப்பு போன்ற குற்றங்களின் கீழ் வழக்கு பதியப்பட்டது. இதுகுறித்து பிரேம் பிரகாஷை தொடர்பு கொண்டபோது தனது மாணவர்களுக்கு குட் மார்னிங் குட் நைட் மட்டுமே அனுப்புவதாகக் கூறிய அவர் கவனக்குறைவால் தவறான குறுஞ்செய்திகள் அனுப்ப பட்டிருக்கலாம் என்றும் அதற்கு மாணவிகளிடம் மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்தார். அதோடு இதற்கு கொடுக்கும் தண்டனையை ஏற்பதற்கும் தான் தயார் என காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்