தோனியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தான் சுரேஷ் ரெய்னா ஐபிஎல் அணியில் இருந்து விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நேரடியாக சென்று விட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டும் ஒரு வாரம் சென்னையில் தங்கியிருந்து பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. பயிற்சி முடிந்த பிறகு கடந்த 21ஆம் தேதி துபாய்க்கு சென்றது. அங்கு ஒரு வாரம் தனிமைப் படுத்தப்பட்டது அதன் பிறகு 22ஆம் தேதிகொரோனா தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அணியை சேர்ந்த 13 பேருக்கு தொற்று உறுதியானது.
இதனால் அதிருப்தி அடைந்த சுரேஷ் ரெய்னா சென்னையில் தங்கி பயிற்சி மேற்கொண்டது தான் தொற்று ஏற்பட காரணம் என்று கூறியதோடு எதற்காக சென்னையில் கேம்ப் வைத்தீர்கள் என்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்திடம் கேட்டுள்ளார். அதற்கு இது தோனியின் முடிவு என பதில் அளித்துள்ளனர். அதோடு வீரர்கள் சரியாக தனிமைப்படுத்துதல் மேற்கொள்ளவில்லை என்ற கோபமும் சுரேஷ் ரெய்னாவிற்கு இருந்துள்ளது. இதனை தொடர்ந்து சுரேஷ் ரெய்னா தோனியிடம் சென்று சென்னையில் கேம்ப் அமைத்தது குறித்தும் வீரர்களின் செயல்பாடு குறித்தும் கேள்வி கேட்டுள்ளார்.
இதனால் இருவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் தான் சுரேஷ் ரெய்னா ஐபிஎல்லில் இருந்து விலகி இந்தியாவிற்கு திரும்பியதாக தகவல் தெரியவந்துள்ளது. ரெய்னாவின் மாமா கொலை செய்யப்பட்டது தான் இத்தகைய முடிவுக்கு காரணம் என்று கூறப்பட்டிருந்தாலும் அவர் கொலை செய்யப்பட்டது 19ஆம் தேதி என்பதும் 21ஆம் தேதி தான் ரெய்னா துபாய் புறப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.