கேரள மக்களால் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை தமிழகத்திலும் வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது.
மலையாள மொழி பேசும் அனைத்து மக்களாலும் வருடம் தோறும் ஆவணி மாதத்தில் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை, தமிழகத்திலும் கேரள எல்லையோர மாவட்டங்களில் வெகு கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் இந்த வருடம் கொரோனா தாக்கத்தால் எளிமையான முறையில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
கோவையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை விடப்பட்டு, தனிநபர் இடைவெளியுடன் ஓணம் பண்டிகையை கொண்டாட மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியிருந்தார். அதனை பின்பற்றி பொதுமக்கள் வீடுகளிலேயே அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகையை கொண்டாடினர். மேலும் சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் அத்தப்பூ கோலங்கள் இடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோவையிலும் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் மலையாளிகள் தங்களது வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் முகக்கவசம், தனிநபர் இடைவெளியை கடைபிடித்து வீடுகளிலேயே அத்தப்பூ கோலமிட்டு எளிமையான முறையில் கொண்டாடி மகிழ்கின்றனர். நாகர்கோவில் வடசேரியில் அமைந்துள்ள ஓணம் கோவிலில் சிறப்பு பூஜையும் நடைபெற்றது. கோயில்களிலும் வீடுகளிலும் மாவேலி மன்னனை வரவேற்கும் வகையில் அத்த பூ கோலம் போடப்பட்டுள்ளது.