தமிழகத்தில் நாளை செயல்பட இருக்கும் வணிகவளாகத்திற்க்கான வழிகாட்டு நெறிமுறையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்ற்றால் பிறப்பிக்கப்பட்ட 7ஆம் கட்ட ஊரடங்கு இன்றோடு நிறைவடைகிறது. நாளை முதல் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வு அமலாக இருக்கிறது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 30 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வில் மாநிலத்திற்கு உள்ளேயும், மாநிலத்திற்கு வெளியேயும் போக்குவரத்துக்கு தடை இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. செப்டம்பர் ஏழாம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவை படிப்படியாக தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த வழிகாட்டு நெறிமுறைகளை சார்ந்தே தமிழக அரசும் நேற்று புதிய தளர்வுகள் குறித்து அறிவிப்பு வெளியிட்டது. தமிழகத்தில் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இருக்கும் என்று தமிழக அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. மக்களின் வாழ்வாதாரம், மாநிலத்தின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு நாளை முதல் பல்வேறு தளர்வுகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியிருந்தது.
இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் உள்ள வணிக வளாகங்கள், அனைத்து வகையான ஷோரூம்கள், பெரிய கடைகள் 100% பணியாளர்களை கொண்டு இயங்கலாம் என்றும், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல் படலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து தமிழகத்தில் நாளை முதல் வணிக வளாகங்கள் திறக்கப்படுகின்றன. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
வணிக வளாகங்களும், ஷோரூம்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து இருக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் உள்ளே வரவும், வெளியே செல்லவும் தனித்தனியாக வாசல்கள் இருக்க வேண்டும். நோய் அறிகுறி உள்ளவர்கள் வணிக வளாகத்திற்குள், ஷோரூம்களுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.