இன்றைய சமூகத்தில் காதல் என்பது உணர்ச்சியைத் தாண்டி பொழுதுபோக்கான ஒரு விஷயமாக பார்க்கப்பட்டு விட்டது. நடப்பு வாழ்க்கையில் சந்தோஷத்தை அளிக்க கூடிய காதல், பிற்காலத்தில் அதாவது திருமண வாழ்க்கைக்கு பின் கசப்பான நிகழ்வாக மாறி விடுகிறது. அதற்கான காரணம், ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் ஏதோ ஒருவித ஈர்ப்பின் காரணமாக நேசித்து விட்டு, பிறகு ஒத்துப் போகாமல் திருமணமான சில மாதங்களிலேயே விவாகரத்து வேண்டும் என்று நீதிமன்ற வாசலில் நிற்கின்றனர். நீதிமன்றங்களில் வரக்கூடிய சாதாரண வழக்குகளை விட,
விவாகரத்துக்கான வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றன. விவாகரத்து செய்வது அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஆனால் ஒரு குழந்தை என்று வந்தபின், விவாகரத்து செய்வது குழந்தையின் எதிர்காலத்தை பாதிக்கும். இந்நிலையில் விவாகரத்து செய்ய நினைப்பவர்களின் மனதை மாற்ற மேரேஜ் ஸ்டோரி என்ற ஓர் அற்புதமான படம் ஒன்று பாலிவுட்டில் வெளியாகி உள்ளது. இதன்படி, காதலித்து கல்யாணம் செய்து பத்து வருடங்கள் கல்யாண வாழ்க்கையில் ஈடுபட்டு வரும் படத்தின் கதாநாயகனும், கதாநாயகியும் கல்யாண வாழ்க்கையில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பிரிய நினைக்கிறார்கள்.
இதற்குப் பிறகு இவர்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட சம்பவங்கள் என்னென்ன என்பதுதான் இந்த மேரேஜ் ஸ்டோரி படத்தின் கதை. தாம்பத்திய வாழ்க்கையின் முக்கியத்துவத்தை பொறுப்புணர்வோடு பதிவு செய்திருக்கிறது இந்த படம். விவாகரத்து செய்ய நினைப்பவர்களின் மனதை இந்த படம் ஒருவேளை மாற்றும் விதத்தில் அமைந்தாலும், திருமணத்திற்கு முன்பே தனக்கு வரக்கூடிய துணை நம்மை அனுசரித்துச் செல்பவர்கள் தானா? நமது கேரக்டர்களுக்கு ஏற்றவர்களா? அவர்களுக்கும், நமக்கும் ஒத்துப் போகுமா? என்பதை பரிசீலித்து திருமணம் செய்து கொள்வது சமூகத்திற்கு நல்லது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.