Categories
அரசியல் தேசிய செய்திகள்

இடது முதல் வலது வரை பிரணாப் என்ற அரசியல் சகாப்தம்….!!

ஆசிரியர், வழக்குரைஞர், அமைச்சர், ஜனாதிபதி என எப்படிப் பார்த்தாலும் அரசியல் வாழ்கையில் அவர் ஒரு சகாப்தம், பிரணாப் முகர்ஜி வாழ்க்கை குறித்த சுவாரசிய தகவல்கள் இதோ!

முன்னாள் குடியரசுத் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பிரணாப் முகர்ஜி, கடந்த 1935ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி மேற்கு வங்கம் மாநிலத்தில் பிறந்தார். இவர், நாட்டின் 13ஆவது குடியரசுத் தலைவராக, கடந்த 2012ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை பதவி வகித்துள்ளார். கடந்த 2009ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை நாட்டின் நிதி அமைச்சராக இருந்துள்ளார்.

அரசியல் மற்றும் வரலாற்றில் முதுகலை பட்டம் பெற்ற பிரணாப் முகர்ஜி, சட்டப் படிப்புகளை கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் படித்தார். ஆசிரியராக, பத்திரிகையாளராக, வழக்குரைஞராக வாழ்க்கையைத் தொடங்கிய அவர், கடந்த 1957ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். முகர்ஜி, தனது அரசியல் பயணத்தைத் தொடங்குவதற்கு முன், கொல்கத்தாவில் உள்ள துணை கணக்காளர் அலுவலகத்தில் ஒரு உயர் பிரிவு எழுத்தாளராக இருந்தார். அதன் பின்பு, கடந்த 1963ஆம் ஆண்டில், வித்யநகர் கல்லூரியில், அரசியல் விரிவுரையாளராகப் பணியாற்றினார். மேலும் தேஷர் டாக் செய்தி நிறுவனத்தில் பத்திரிகையாளராகவும் பணியாற்றினார்.

பிரணாப்பின் தந்தை கமடா கிங்கர் முகர்ஜி, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக செயல்பட்டுவந்தார். கடந்த 1952ஆம் ஆண்டு முதல் 1964ஆம் ஆண்டு வரை, காங்கிரஸ் கட்சியின் சார்பாக மேற்கு வங்க சட்ட மேலவை உறுப்பினராகப் பதவி வகித்தார். கடந்த 1969ஆம் ஆண்டு, இந்திரா காந்தியின் ஆதரவோடு மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்திரா காந்தியின் நம்பத் தகுந்தவராகத் திகழ்ந்த இவருக்கு, கடந்த 1973ஆம் ஆண்டு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. கடந்த 1975ஆம் ஆண்டு முதல் 1977ஆம் ஆண்டு வரை, அமல்படுத்தப்பட்ட அவசர நிலை பிரகடனத்திற்கு மற்ற காங்கிரஸ் தலைவர்கள் போல் முகர்ஜியும் ஆதரவாக இருந்தார். கடந்த 1982ஆம் ஆண்டு, நிதித்துறை அமைச்சராகவும், கடந்த 1980ஆம் ஆண்டு முதல் 1985ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை குழு தலைவராகவும் முகர்ஜி பதவி வகித்தார்.

முகர்ஜி தன்னையே இந்திராவின் அரசியல் வாரிசாக கருதினார். ஆனால் ராஜீவ் காந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார். அதைத் தொடர்ந்து அவர் தனது சொந்த கட்சியான ராஷ்டிரிய சமாஜ்வாடி காங்கிரஸை உருவாக்கினார். ராஜீவ் காந்தியுடன் ஒருமித்த கருத்தை எட்டிய பின்னர், கடந்த 1989 இல் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் இணைந்தார்.

ராஜீவ் காந்தி படுகொலைக்கு பின், பி.வி. நரசிம்மராவ் ஆட்சி காலத்தில் திட்டக்குழு துணைத் தலைவர் பொறுப்பு பிரணாப் முகர்ஜிக்கு கொடுக்கப்பட்டது. கடந்த 1995ஆம் ஆண்டு நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சராகப் பணியாற்றினார். கடந்த 1998ஆம் ஆண்டு, காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி வருவதற்கு பிரணாப் உறுதுணையாக இருந்தார்.

கடந்த 2011ஆம் ஆண்டு, இந்தியாவின் சிறந்த நிர்வாகி என்ற விருது பிரணாப் முகர்ஜிக்கு வழங்கப்பட்டது. நிதி, பாதுகாப்பு, வெளியுறவு உள்ளிட்ட முக்கிய துறைகளின் அமைச்சராகவும் பிரணாப் பதவி வகித்துள்ளார். தாராளமயமாக்கலுக்கு முன்பாகவும், அதற்கு பிறகான கால கட்டத்திலும் பட்ஜெட்டை தாக்கல் செய்த ஒரே நிதியமைச்சர் பிரணாப் ஆவார்.

ஆங்கில வார்த்தைகளை பிரணாப் சரியாக பிரயோகிக்கவில்லை எனக் கூறி, ஆங்கிலத்தை கற்க ஆசிரியரை நியமிக்க இந்திரா ஆலோசனை வழங்கினார். ஆனால், வங்க மொழியை தாய் மொழியாக கொண்ட தனக்கு போதுமான ஆங்கில புலமை உள்ளது எனக்கூறி அவர் அதற்கு மறுப்பு தெரிவித்தார். கடந்த 2004ஆம் ஆண்டு, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு வந்தபோது மக்களவைத் தேர்தலில் தனது முதல் வெற்றியை பிரணாப் பதிவு செய்தார்.

கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் மக்களவை குழுத்தலைவராகவும், பல்வேறு அமைச்சரவையின் நிலைக்குழு தலைவராகவும், பிரணாப் பதவி வகித்தார். கடந்த 2004ஆம் ஆண்டுக்கு முன்பு வரை, மக்களவைத் தேர்தலில் பிரணாப் வெற்றிபெற்றதே இல்லை.

இக்காரணத்தால், காங்கிரஸ் கட்சியின் மற்ற தலைவர்கள் அவரை ‘மக்கள் தொடர்பு இல்லாத தலைவர்’ என அழைத்து வந்தனர். ஜங்கிப்பூர் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றதன் மூலம் தனது கனவு நிறைவேறியதாக அவர் தெரிவித்தார். கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி, குடியரசுத் தலைவருக்கான பதவிக்காலம் நிறைவடைந்தது. இதையடுத்து, அவரது உடல்நிலை ஒத்துழைக்காத காரணத்தால், அரசியலிலிருந்து ஒதுங்கிக் கொள்ள முடிவு எடுத்தார்.

Categories

Tech |