ஆசிரியர் தகுதி தேர்வில் ஆயுள் காலம் 7 ஆண்டுகளுக்கு மேல் நீட்டிக்கப்பட மாட்டாது என அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அரசு பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளில் ஒன்றில் இருந்து எட்டாம் வகுப்பு வரையில் ஆசிரியர் பணிக்குச் செல்ல வேண்டுமென்றால் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். அது மட்டுமல்லாமல் அந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்றாலும், வேலைக்காக இன்னொரு தேர்வையும் எழுத வேண்டும் என்ற அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறக்கூடியவர்களுடைய சான்றிதழ் என்பது ஏழு ஆண்டுகள் வரை தான் செல்லுபடியாகும் என்று ஏற்கனவே மத்திய அரசின் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 7 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் மீண்டும் புதிதாக தான் தேர்வு எழுத வேண்டும்.
இந்த நிலையில் 2013 ஆம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் கிட்டத்தட்ட 80,000 பேர் தேர்ச்சி அடைந்திருந்தார். அவர்களுக்கான சான்றிதழ்களுடைய காலம் இந்த வருடத்தோடு முடிவடைகிறது. இன்னும் சில மாதங்கள் முடிவடைய இருக்கும் நிலையில் தங்களுடைய சான்றிதழில் வாழ்நாள் முழுக்க செல்லுபடியாகும் என்ற உத்தரவை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என்பது தேர்ச்சி பெற்ற 80,000 மாணவர்களுடைய கோரிக்கையாக இருந்தது.
இந்த நிலையில்தான் இது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக பதிலளித்திருக்கிறார். எந்த காரணம் கொண்டும் சான்றிதழ் ஆயுட்காலம் என்பது ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு நீட்டிக்கப்படாது. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு தேர்வை எழுதிக் கொள்ளலாம். எந்த காரணம் கொண்டும் இதனுடைய செல்லத்தக்க ஆயுள் காலம் நீடிக்க கூடாது என்ற அறிவிப்பை திட்டவட்டமாக அமைச்சர் தெரிவித்தார். இதனால் தேர்ச்சி பெற்ற 80 ஆயிரம் பேரும் அடுத்து நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வை மீண்டும் எழுதுவதை தவிர வேறு வழியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.