Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஐந்து பெண்கள் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சி… தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு பரபரப்பு…!!

ஐந்து பெண்கள் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சி செய்ததால் காவல்துறையினர் அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாகம்மாள் என்பவர் தேனி மாவட்டம் காந்தி நகரை சேர்ந்தவர். அவரது மகள்கள் மூன்று பேரும் மற்றும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த கருப்பையாவின் மகள்கள் ஆகியோரும் குழந்தைகளுடன் நேற்று தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் இரண்டு கேன்களில் மண்ணெண்ணையை மறைத்து எடுத்து வந்தனர். கலெக்டர் அலுவலகத்திற்கு முன் வந்த சிறிது நேரத்தில் திடீரென தங்கள் உடல்களிலும் குழந்தைகள் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அங்கு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் இதைப் பார்த்து விரைந்து சென்று தீக்குளிக்க முயன்ற பெண்களை தடுத்து நிறுத்தினார்.

மேலும் தள்ளுவண்டி கடையில் குடத்திலிருந்து தண்ணீரைக் கொண்டுவந்து அவர்கள் மீது போலீசார் ஊற்றினர். அந்தப் பெண்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் கூறுகையில் ” நாங்கள் அருகருகே உள்ள வீடுகளில் 40 வருடங்களாக வசித்து வருகிறோம். எங்கள் வீடுகளை காலி செய்யுமாறு சிலர் வந்து மிரட்டுகின்றனர். அதில் ஒருவர் திருநங்கையை தூண்டிவிட்டு தகராறு செய்கிறார். எங்கள் வீடுகளில் கடந்த 29ஆம் தேதி 6 பேர் கும்பலாக வந்து வீட்டில் இருந்தவர்களை தாக்கி மிரட்டினர். எனவே எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.” என்று அப்பெண்கள் கூறினர். இதைத்தொடர்ந்து தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்ததாக நாகம்மாள் மற்றும் அவருடன் வந்தவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தேனி கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Categories

Tech |