Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“தொடர் மின்தடை” மாலை, பத்தியுடன்…. டிரான்ஸ்பார்மருக்கு அஞ்சலி…!!

தொடர் மின்தடையால் டிரான்ஸ்பார்மருக்கு அஞ்சலி செலுத்தி கிராம மக்கள் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட புதூர், எம்.ஜி.ஆர் நகர், மஞ்சள்பரப்பு, மூலக்கடை, புல்லாவெளி, பெரும்பாறை, குத்துகாடு, கொங்கபட்டி, கட்டகாடு, வெள்ளரிக்காய் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மின்தடை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மக்கள் மின்சாரம் இன்றி அவதிப்பட்டு வந்துள்ளனர். அதோடு மின்சாரமின்றி மின் மோட்டாரை இயக்க வழி இல்லாமல் குடிநீர் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு பல கிராமங்களில் உருவாக்கியுள்ளது.

துணை மின்நிலையத்தின் கட்டுப்பாட்டில் 50க்கும் அதிகமான டிரான்ஸ்பார்மர்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றை பராமரிப்பதற்கு மிகவும் குறைந்த அளவிலேயே ஊழியர்கள் இருக்கின்றனர். அதோடு மலைப்பகுதிக்கு என்று தனியாக ஊழியர்களை பணியமர்த்தவில்லை என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக மின் தடை பிரச்சனை ஏற்பட்டால் அதனை சரிசெய்ய இரண்டு தினங்கள் ஆகி விடுவதாக கிராம மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்நிலையில் தொடர்ந்து மின்தடை ஏற்பட்டு வந்ததால் ஆத்திரம் கொண்ட கிராம மக்கள் போராட்டத்தில் இறங்கினர்.

இதனை தொடர்ந்து பெரும்பாறை கிராமத்தில் அமைய பெற்றுள்ள டிரான்ஸ்பார்மர் முன் திரண்ட மக்கள் அதற்கு மாலை போட்டு, ஊதுபத்தி கொளுத்தி வைத்து அஞ்சலி செலுத்தி போராட்டம் மேற்கொண்டனர். கிராம மக்களின் வித்தியாசமான போராட்டம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. போராட்டத்தில் போதுமான மின் ஊழியர்களை பணி நியமனம் செய்து தடையில்லாத மின்சாரத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்தனர்.

Categories

Tech |