கணவனை கொலை செய்து வீட்டில் தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கனடாவில் டெபோரா கெவின் தம்பதியினர் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் இருவரும் சேர்ந்து வாழ முடிவெடுத்தனர். ஆனால் டெபோரா ஒருநாள் தனது கணவர் கெவினை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததோடு அவர் இருந்த அறையை முழுவதுமாக தீ வைத்து எரித்தார். இதனால் கெவின் அடையாளம் தெரியாத அளவிற்கு எரிந்து போனார். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டு டெபோராவுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெபோரா மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்திற்கு வழக்கு சென்றது. மீண்டும் புதிதாக துவங்கப்பட்ட விசாரணையில் கொலைக்கான காரணம் தெரிய வந்துள்ளது. அதாவது கெவின் டெபோரா சேர்ந்து வாழ்வதற்கு முடிவு செய்து சிறிது நாட்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். ஆனால் வெகு விரைவில் கெவின் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி விட்டதாக தெரிவித்துள்ளார் டெபோரா. ஒருநாள் நன்றாக மது அருந்திவிட்டு குடிபோதையில் வீட்டிற்கு வந்த கெவின் மனைவி டெபோராவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தனது துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.
இதனால் பயந்துபோன டெபோரா என்றாவது ஒருநாள் தனது கணவர் தன்னை கொலை செய்து விடுவார் என்று நினைத்து வீட்டில் இருந்த கெவினின் துப்பாக்கியால் அவரை சுட்டுக் கொலை செய்துவிட்டார். பின்னர் அவர் இருந்த அறையையும் தீ வைத்துக் கொளுத்தி உள்ளார். இதுகுறித்து அக்கம்பக்கம் இருந்தவர்களிடம் விசாரித்தபோது டெபோரா நற்குணம் கொண்ட ஆசிரியையாகவே இருந்தார்.கெவின் செய்த சித்திரவதைகளால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அவர் பாதிக்கப்பட்டு தற்போது குற்றவாளியாக நிற்கிறார் என தெரிவித்துள்ளனர்.
ஆனால் கெவின் குடும்பத்தினர் கெவின் ஒரு தந்தை அவருக்கு ஒரு மகள் இருக்கிறார். மகளிடமிருந்து தந்தையைப் பிரிக்க டெபோராவிற்கு எந்த உரிமையும் இல்லை என வாதம் செய்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கணவனை கொலை செய்த டெபோராவுக்கு 8 வருடங்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.