கொரோனா தடுப்பு பணிக்காக சென்னை மாநகராட்சி கடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளது.
கொரோனா நோய்த் தொற்றுக்கான பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் தற்போது கடுமையான எச்சரிக்கை ஒன்றினை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் சென்னை மக்களுக்கு விடுத்துள்ளார். அதன்படி சென்னையில் இன்று முதல் பொது இடத்தில் எச்சில் துப்பினாலோ, குப்பை கொட்டினாலோ ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மின்னலைப் போல் பரவி வரும்கொரோனா நோய் தொற்றினால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கினால் மக்களின் வாழ்வாதாரமும் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே மக்களின் பொருளாதாரத்தை மீட்கும் எண்ணத்தை கருத்தில் கொண்டு பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. தமிழக மக்களின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் அதே நேரத்தில் மக்களின் உயிரும் மிகவும் முக்கியமானது என்றும் கூறியுள்ளார்.
நோய்த்தொற்று பரவாமல் இருக்க நாம் நமது பகுதியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும் நோய் பரவுவதற்கு நாமே ஒரு காரணமாக இருக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். எச்சில் துப்பவோ, குப்பை கொட்டினாலோ ரூபாய் 500 அபராதம் விதிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் கொரோனா தடுப்பு விதிகளை மீறி செல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரித்துள்ளார். எனவே மக்கள் அனைவரும் தங்களது இடத்தை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பது மிகவும் அவசியமாக உள்ளது எனவும் வலியுறுத்தியுள்ளார்.