Categories
உலக செய்திகள்

காரில் வசிக்கும் சிறிய பறவை குஞ்சுகள்… பரிசளித்த துபாய் இளவரசர்…!!!

துபாய் பட்டத்து இளவரசர் ஒரு சிறிய பறவைக்காக தனது காரை அன்பளிப்பாக அளித்த செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

துபாய் பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பால் வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்த்து வந்துள்ளார். அச்சமயத்தில் அவர் அடிக்கடி பயன்படுத்தும் கருப்பு நிற ‘ மெர்சிடஸ்’ என்ற காரின் முகப்பு பகுதியில் சிறிய பறவை ஒன்று கூடுகட்டி முட்டையிட்டுள்ளது. அதன் பின்னர் அந்தப் பறவை அதில் அமர்ந்து அடைகாக்க தொடங்கியுள்ளது. அதனைக் கண்ட பட்டத்து இளவரசர் அந்த வாகனத்தை பயன்படுத்தாமல் அப்படியே விட்டுவிட்டார்.

அதுமட்டுமன்றி பறவையின் கூட்டை கலைப்பதற்கு அந்த வாகனத்தை சுற்றி பணியாளர்கள் எவரும் சென்றுவிடக்கூடாது என்பதற்காக எச்சரிக்கை விடுக்கும் வகையில் சிவப்பு நிற டேப்பை நான்கு புறங்களிலும் சுற்றி வைத்தார்.அந்தப் பறவை தனது முட்டைகளை காரின் முகப்பு பகுதியில் தொடர்ந்து அடைகாத்து வந்தது. ஒரு சிறிய பறவைக்காக தனது காரையே அளித்த பட்டத்து இளவரசரின் செயல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடக்கத்தில் அந்தப் பறவை அடைகாத்த முட்டைகளில் இருந்து இரண்டு சிறிய குஞ்சுகள் வெளியே வந்தன.

அதனை பட்டத்து இளவரசர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகுந்த மகிழ்ச்சியுடன் பதிவிட்டார்.தற்போது அந்தக் குஞ்சுகள் வளர்ந்து பறக்கும் நிலையில் இருக்கின்றன. அதன் தாய் பறவை தன் குஞ்சுகளுக்கு தொடர்ந்து உணவைத் தேடி வந்து அளித்துக் கொண்டிருக்கிறது. பல நாட்கள் கடந்தாலும் அந்த காரின் முகப்பு பகுதியிலேயே தனது இருப்பிடத்தை அமைத்துக் கொண்டு எங்கும் செல்லாமல் மகிழ்ச்சியுடன் பறவைக் குஞ்சுகள் விளையாடிக் கொண்டிருக்கின்றன. எங்கும் செல்லாமல் தொடர்ந்து அதே இடத்திலேயே வசித்துக் கொண்டிருக்கும் அந்தப் பறவைகளை கண்டு பலரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.

 

Categories

Tech |