கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர கண்டதும் சுடும் உத்தரவை வட கொரிய அதிபர் பிறப்பித்துள்ளார்.
வடகொரியாவில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் அதிரடி உத்தரவை பிறப்பித்திருக்கிறார். மிகக்கடுமையான இந்த புதிய நடவடிக்கை வரும் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் வட கொரிய பொதுமக்கள் சீன எல்லை அருகே சென்று அதற்கான காரணத்தை அறியாமல் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நகரப் போலீசார் கூறியுள்ளனர். இந்த கண்டதும் சுட உத்தரவு சீனாவுடனான வடகொரியாவின் 250 மைல் தொலைவு எல்லைப்பகுதி க்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி எல்லைப் பகுதியில் உள்ள போலீசார் மற்றும் ராணுவ முகாம்களுக்கு தேவையான துப்பாக்கி குண்டுகளை வட கொரிய அரசாங்கம் அனுப்பி வைத்துள்ளது. அதே சமயத்தில் துப்பாக்கி சூடு மேற்கொள்ளும் அதிகாரிகள் மீது துறை ரீதியான எவ்வித நடவடிக்கையும் எடுக்க கூடாது எனவும் வட கொரிய அரசு கூறியுள்ளது. கொரோனா பரவலை முன்னிட்டு இரு நாடுகளும் எல்லைகளை மூடி வர்த்தகத்தை நிறுத்திய போதிலும் எல்லை அருகாமையில் இருக்கின்ற மக்கள் ரகசியமாக வர்த்தகத்தை முன்னெடுத்து வருகின்றனர். தற்போது கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், சிறப்பு படைகளும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.