ஜப்பான் பிரதமராக யோஷிஹைட் சுகாநியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜப்பானின் நீண்டகால பிரதமர் என்ற பெருமையைப் பெற்ற ஷின்ஜோ அபே, தன் உடல்நிலையை கருத்தில் கொண்டு சில நாட்களுக்கு முன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இருந்தாலும் புதிய பிரதமரை நாடாளுமன்றம் தேர்வு செய்யும் வரையில் தான் பதவியில் நீடிப்பேன் என அவர் உறுதியளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஜப்பானின் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வாக்கெடுப்பு வருகின்ற 14ஆம் தேதி நடைபெறுகிறது. அதில் ஆளும் தாராளவாத ஜனநாயக கட்சியின் முக்கிய பிரதிநிதிகள் மட்டுமே பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது.
முன்னாள் வெளியுறவு மந்திரி பமியோ கிஷிடா, முன்னாள் ராணுவ மந்திரி ஷிகெரு இஷிபா ஆகியோர் பிரதமர் பதவிக்குப் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் ஜப்பானின் தலைமை அமைச்சரவை செயலாளரும், ஷின்ஜோ அபேயின் விசுவாசிமான யோஷிஹைட் சுகா பிரதமராக தேர்வு செய்யப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆளும் தாராளவாத ஜனநாயக கட்சியின் தலைவர்கள் பலர் சுகாவை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளதாக கட்சி வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. அதுமட்டுமன்றி 14ஆம் தேதி நடைபெறும் வாக்கெடுப்பில் முக்கிய பிரதிநிதிகள் மட்டுமே பங்கேற்பதால் சுகாவுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரியவந்துள்ளது.