திண்டுக்கல் அருகே குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவர்கள் 3 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
திண்டுக்கல் அடுத்துள்ள சிறுமலை பிரிவு பகுதியை சேர்ந்தவர்கள் சஜித், ராகுல், சதீஷ், அருளானந்தம் 13 வயது சிறுவர்களான இவர்கள் ஆலமரத்துப்பட்டி பகுதியில் உள்ள கோட்டையன்பிள்ளை குளத்தில் நேற்று குளிப்பதற்காக சென்றுள்ளனர். கடந்த சில நாட்களாக திண்டுக்கல் பகுதியில் பெய்து வரும் மழையினால் குளத்தில் அதிகமான தண்ணீர் இருந்துள்ளது. இதனால் குளத்தின் ஆழம் தெரியாமல் இறங்கிய சஜித் தண்ணீரில் மூழ்கி உள்ளார். அவரை காப்பாற்ற முயன்ற ராகுல் மற்றும் சதீஷ் ஆகியோரும் தண்ணீரில் மூழ்கினர்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உடன் சென்ற சிறுவர்கள் அக்கம்பக்கத்தினர் உதவிக்காக கூச்சலிட்டுள்ளனர். அதன் மூலம் நிகழ்வு இடத்திற்கு வந்த பொதுமக்கள் திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து தீயணைப்புத்துறையினர் சென்று தண்ணீரில் மூழ்கிய மூன்று சிறுவர்களையும் சடலமாக மீட்டனர். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.