அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்னதாக கொரோனா தடுப்பூசி வெளியிடப்படும் என டிரம்ப் கூறியுள்ளார்.
உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முன்னிலையில் இருக்கின்றது. அங்கு வருகின்ற நவம்பர் மூன்றாம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. அந்தத் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக டொனால்ட் டிரம்ப் மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் போட்டியிடுகிறார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கொரோனாவின் தாக்கம் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தேர்தலுக்கு முன்னதாக கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்து விட்டால் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதனால் தேர்தல் நாளுக்கு முன்னர் கொரோனா தடுப்பு மருந்தை வெளியிடுவதில் டொனால்ட் ட்ரம்ப் அதிக ஆர்வம் காட்டியுள்ளார். சில நாட்களுக்கு முன் தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றிய அவர் தேர்தலுக்கு முன்னதாக தடுப்பு மருந்து வினியோகம் செய்யப்படும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் அமெரிக்கா நோய்த்தொற்று தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை தடுப்பு மையத்தின் இயக்குனர் ராபர்ட் கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி, அமெரிக்க மாகாண கவர்னர்களுக்கு கடிதம் ஒன்று எழுதி இருந்தார். அந்தக் கடிதத்தில் வருகின்ற நவம்பர் 1ஆம் தேதி முதல் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி வெளியிடப்படும்.
அதனால் அனைத்து சுகாதார மையங்கள் மற்றும் மருத்துவமனைகள் தயார் நிலையில் வைத்திருக்கும் படி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் இந்தியாவில் ஆகஸ்ட் 15ஆம் தேதி கோவக்ஸின் மருந்து தயார் ஆகிவிடும் என இந்திய மருத்துவ கழகம் அறிவித்திருந்த போது கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. அதனைப்போலவே அமெரிக்காவிலும் தேர்தல் வெற்றியை கருத்தில் கொண்டு அவசரமாக கொரோனா தடுப்பூசியை அறிமுகப்படுத்துவதாக டொனால்ட் ட்ரம்ப் எதிர்ப்பாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.