ஈரோடு மாவட்டம் சிவகிரி அரசுப் பேருந்து நிலையத்தில் இருந்து, ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து (எண் 42), லக்காபுரம் அருகே சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த 2 பைக்குகள் மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மொடக்குறிச்சி போலீசார், பேருந்தை அப்புறப்படுத்தினர். அப்போது, பேருந்தின் அடிப்பகுதியில் இரு பைக்குகளும், அதில் பயணித்த 4 பேரின் உடல்களும் இருந்தது தெரியவந்தது.
மேலும், பேருந்தில் இருந்த பயணிகள் 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.. இதற்கிடையே அவசர ஊர்தி மூலம் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பிவைத்தனர்.. மேலும் காயமடைந்த பயணிகளுக்கு முதலுதவி சிகிச்சை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த விபத்து குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மொடக்குறிச்சி குளூர் பகுதியில் வசித்து வந்த பாலசுப்பிரமணி, மரகதம், பாவையம்மாள், மோகனாபுரி ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் இந்த விபத்தில் இறந்தது அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் முழு பொது முடக்கத்திலிருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு, பொதுப் போக்குவரத்து தொடங்கப்பட்ட நிலையில், இந்தக்கோர விபத்து நிகழ்ந்திருப்பது வாகன ஓட்டிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது..