கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று தான் இருக்கிறது என்று தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று என்பது அதிகரித்த வண்ணமே உள்ளது. ஆனால் சமீபத்தில் கொரோனா தொற்று என்பது சமூக பரவலாக மாறவில்லை என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதற்கு முன் சென்னையில் மட்டுமே தொற்று எண்ணிக்கை என்பது அதிகரித்து வந்தது. ஆனால் தற்பொழுது அனைத்து மாவட்டங்களிலும் நாளுக்குநாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் தமிழக அரசை குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதாவது வேலூரை சார்ந்த ராஜலட்சுமி என்பவர் தொற்று பரவலை தமிழக அரசு கட்டுப்படுத்த தவறி விட்டது. அதனால் தான் கொரானா பரவல் அதிகரித்து வருகிறது என்று தமிழக அரசை குற்றம் சாட்டி பொதுநலன் வழக்கு ஒன்றை உயர்நீதிமன்றத்தில் தொடுத்திருந்தார். இதனை விசாரிக்க உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா ஆகியோர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை எதிர்த்து, கொரோனா பரவலை தடுக்க தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் கொடுத்தது. அதன்பின் தமிழக அரசின் கருத்தை கேட்டு அறிந்து இந்த வழக்கை முடித்து வைத்தது உயர்நீதிமன்றம்.