உய்குர் இன மக்கள் தொகையை கட்டுப்படுத்த சீனா எடுத்த மோசமான நடவடிக்கை குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது
சீனாவில் உய்குர் இன மக்கள் தொகையை குறைக்க சீன அரசு செய்யும் கொடூரமான செயல் குறித்து அங்கு பணிபுரிந்த மருத்துவர் ஒருவரே உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார். சீன அரசின் திட்டத்தின் ஒரு பகுதியாக அந்த மருத்துவர் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு கருக் கலைப்புகளை செய்துள்ளார் என்ற தகவலை அவர் கூறியுள்ளார். சீனாவிலிருந்து யாருக்கும் தெரியாமல் தப்பித்து துருக்கியில் தற்போது வாழ்ந்து வரும் அந்த மருத்துவர் கூறுகையில், “சீன அரசின் கீழ் பணிபுரிந்து வந்த போது உய்குர் பெண்கள் 500 முதல் 600 பேருக்கு அறுவை சிகிச்சைகளை செய்து உள்ளேன்.
அவை கட்டாய கருக்கலைப்பு, கருத்தடை, கருப்பை அகற்றுதல் போன்ற அறுவை சிகிச்சைகளே. அதோடு உய்குர் மக்கள் வசிக்கும் கிராமங்களுக்கு தொடர்ந்து சென்று இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் கருக்கலைப்பு மற்றும் கருத்தடை சிகிச்சை குறித்து பல அப்பாவி உய்குர் பெண்களுக்கு தெரியாது. ஒரு மருத்துவராக இது எனது கடமை என செய்தேன். ஆனால் இப்போது அத்தகைய நடவடிக்கைகளுக்கு வருத்தம் கொள்கின்றேன். நான் செய்த தவறுக்கு என்னால் முயன்ற உதவிகளை உய்குர் மக்களுக்கு செய்து வருகின்றேன்.
அவர்களை சீனாவில் இருந்து மீட்கும் நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளேன்” என கூறியுள்ளார். சீனாவில் இருந்து தப்பிக்கும் உய்குர் மக்கள் துருக்கியில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். இதுவரை 50 ஆயிரம் மக்கள் இதுபோன்று துருக்கிக்கு வந்தடைந்துள்ளனர். சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில் ஒரு மில்லியன் உய்குர் மக்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் வாழும் 12 மில்லியன் உய்குர் மக்கள் பெரும்பாலும் இஸ்லாமியர்களாகவே இருக்கின்றனர்.