திருச்செந்தூர் முருகனை தரிசிக்க பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு கட்டாயம் செய்ய வேண்டும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு கடுமையாக கடந்த மாதம் வரை பின்பற்றப்பட்டு வந்த நிலையில், தற்போது பல தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதில், முக்கிய தளர்வாக கோவில்கள் திறக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
60 நாட்களுக்கும் மேலாக கோவில்களில் கடவுளை தரிசிக்க முடியாமல் பக்தர்கள் சிரமப்பட்டு வந்த சூழ்நிலையில், கோவில் திறக்கப்பட்டதால் பக்தர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும், கிராமப்புறங்களில் மற்றும் நகர்ப்புறங்களில் இருக்கக்கூடிய கோவில்களில் மக்கள் எப்போதும் போல் சாமியை தரிசித்து வருகின்றனர்.
ஆனால் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களான பழனி மலை முருகன் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்களில் பக்தர்கள் முன்பதிவு உள்ளிட்ட நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து அனுமதிச்சீட்டு பெற்றால் மட்டுமே சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இன்று முதல் கோவிலின் அதிகாரபூர்வ இணையதள முகவரியில் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.