சேலத்தில் நள்ளிரவில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
சேலம் மாநகர் ஐந்து ரோடு அருகேயுள்ள நரசோதிபட்டி பகுதியில் அன்பழகன் மற்றும் சகோதரர் கார்த்திக் ஆகியோர் தங்களது குடும்பத்தாருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் அன்பழகனின் வீடு திடீரென தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டதுடன் வீட்டிற்குள் சிக்கியவர்களை மீட்க போராடினர்.
எனினும் வீட்டிற்குள் உறங்கிக் கொண்டிருந்த கார்த்திக், அவருடைய மனைவி மகேஸ்வரி மகன்கள் சர்வேஷ், முகேஷ் மற்றும் அன்பழகனின் மனைவி புஷ்பா ஆகிய 5 பேரும் தீயில் கருகி உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அன்பழகன், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.. அதிர்ஷ்டவசமாக மாடியில் உறங்கிக் கொண்டிருந்த அன்பழகனின் பெற்றோர் மற்றும் மகள் சௌமியா ஆகியோரை தீயணைப்பு துறையினர் போராடி மீட்டனர். இந்த தீ விபத்து மின்கசிவு காரணமாக நடத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தீ விபத்து குறித்து தகவல் அறிந்த சேலம் மாவட்ட ஆட்சியர் திரு ராமன் மற்றும் சேலம் மாநகர காவல் ஆணையர் திரு செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். நள்ளிரவில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.