திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் கோமுட்டேரி பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவர் வெல்டிங் கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார்.. இவரின் இளைய மகன் சீனிவாசன், அண்மையில் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றார்.. கொரோனா ஊரடங்கு விடுமுறை காலத்தில் தொடர்ச்சியாக செல்போனில் பப்ஜி கேமை அதிக ஆர்வத்துடன் விளையாடி வந்துள்ளார்..
இந்தநிலையில் தான் மத்திய அரசு பப்ஜி உள்ளிட்ட விளையாட்டு செயலிகளுக்கு தடை விதிப்பதாக நேற்று முன்தினம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டது.. இதனைத் தொடர்ந்து, நேற்று மதியம் வீட்டுக்கு திரும்பிய பெருமாள், சீனிவாசனிடம் பப்ஜி கேம் விளையாடுவது தவறு.. மத்திய அரசு பப்ஜியை தடை செய்துவிட்டது.. இனி அதனை நீ விளையாடக் கூடாது என்று கண்டித்து அறிவுரை கூறியிருக்கிறார்.
மேலும், மகன் சீனிவாசனிடமிருந்த செல்போனை எடுத்து வைத்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இதனால் மிகுந்த மனமுடைந்த மாணவர் சீனிவாசன் வீட்டிலுள்ள தனது அறைக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.. இதனையடுத்து வழக்கம் போல தந்தை பெருமாள் சீனிவாசனின் அறைக்குள் சென்று பார்த்தப்போது, அவர் தூக்கில் தொங்கியபடி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து ஆலங்காயம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சீனிவாசனின் உடலைக் கைப்பற்றி வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஆலங்காயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தடை செய்யப்பட்டுள்ள பப்ஜியை விளையாட கூடாது என்று சொன்னதால் மாணவன் சீனிவாசன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.