சத்துணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு உலர் பொருட்களுடன் முட்டைகளையும் சேர்த்து வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு காரணத்தால் பள்ளிகள் மூடப் பட்டிருக்கும் நிலையில் மாணவர்களுக்கு சேரக்கூடிய அனைத்து பொருட்களும் அவர்களை சென்றடையும் விதமாக தமிழக அரசு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அதில் தற்பொழுது சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் தொடக்கப்பள்ளி, உயர் தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரிசி, பருப்பு ஆகிய உலர் உணவுப் பொருட்களுடன் முட்டைகளையும் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உலர் உணவுப் பொருட்கள் ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், இந்த மாதத்தில் இருந்து, பள்ளிகள் திறக்கப்படுவது வரை, மாதம் மாதம் ஒரு பயனாளிக்கு 10 முட்டைகள் வீதம் வழங்க சமூகநல ஆணையருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கும்போதே உலர் உணவுப் பொருட்கள் மற்றும் முட்டைகளை வழங்க வேண்டும் என பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.