பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்திருந்தால் மட்டுமே சட்டப் படிப்பை படிக்க முடியும் என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்திருந்தால் மட்டுமே சட்டப்படிப்பில் சேரும் வகையில் இருக்கும் பார் கவுன்சில் விதிகளைத் திருத்தம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. அதாவது சமீபத்தில், 12ஆம் வகுப்பைத் தனித்தேர்வராகவும், பட்டப்படிப்பைத் தொலைநிலைக் கல்வியிலும் படித்து முடித்த கிருஷ்ணகுமார் சட்டப்படிப்பில் சேர்வதற்காக விண்ணப்பித்த நிலையில், தொலைநிலைக் கல்வியில் படித்ததன் காரணமாக அவரின் விண்ணப்பம் நிராகரிப்பட்டது.
அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து, அவர் உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, தொலைநிலைக் கல்வியில் படித்தவர்களும் சட்டப்படிப்பில் சேர பார் கவுன்சில் விதிகளின்படி தகுதி உண்டு என வாதம் செய்யப்பட்டது. வாதங்களுக்குப் பிறகு பள்ளி, கல்லூரிகளில் படித்தவர்கள் மட்டுமே சட்டப்படிப்பில் சேரும் வகையில் விதிகளைத் திருத்த வேண்டுமென இந்திய பார் கவுன்சிலுக்கு நீதிபதி பரிந்துரை செய்தார். தற்போது உள்ள விதிகளின்படி ஏதேனும் மற்ற தகுதிகளைப் பெற்றிருந்தால் கிருஷ்ணகுமாரைச் சட்டப்படிப்பில் சேர்க்க வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டார்.