தனிமைப்படுத்துதல் வார்டின் நாலாவது மாடியில் இருந்து ஒரு பெண் தவறிக் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்த வார்டு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மதுரவாயலில் அமைந்துள்ள ஒரு தனியார் கல்லூரியில் கொரோனா தனிமைப்படுத்துதல் வார்டு ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு 200க்கும் மேற்பட்ட நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதே வார்டில் மதுரவாயில் அருகில் உள்ள ஆலப்பாக்கத்தை சேர்ந்த 48 வயதான செல்வி என்பவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். இவர் திடீரென்று நேற்று மாலை மாடியிலிருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை மருத்துவமனையில் அனுமதித்த பொழுது அங்கு செல்வியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
அதன்பின் இந்த தகவல் அறிந்து அங்கு வந்த மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு, விசாரணை நடத்திய போது, அவர் ஏற்கனவே மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வந்துள்ளார் என்றும் அருகில் இருப்பவர்களிடம் இங்கிருந்து எப்படியாவது வெளியில் செல்ல வேண்டும் என புலம்பியும் தவிர்த்துள்ளார். இந்த நிலையில் அவர் மாடியில் இருந்து கீழே விழுந்தது தற்கொலையாக இருக்குமா? அல்லது தப்பித்து செல்ல முற்படும் பொழுது தவறி விழுந்து விட்டாரா? என்ற கண்ணோட்டத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதே வார்டில் உயிரிழந்த செல்வியின் மகனும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அங்கு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.