தர்மம் தலைகாக்கும் என்ற கூற்றின் படி 1,10,000 ரூபாய் கொரோனா நிதி உதவியாக பிச்சை எடுத்து ஒரு முதியவர் கொடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்த 70 வயதான பூல்பாண்டியனுக்கு மனைவி, இரு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார். வயோதிக காலத்தில் பிச்சை எடுத்துதான் சாப்பிடக்கூடிய நிலை இருந்தாலும் தனக்குப் போக தான் தானமும் தர்மமும் என்ற கருத்திற்கு விதிவிலக்காக இவர் அமைந்துள்ளார். ஏனென்றால் இவர் தனக்கு கிடைக்கும் வருமானத்தை வைத்து அவர் மட்டும் சாப்பிடாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதி உதவியும் செய்து வருகிறார். அந்த வகையில் 11 தடவை 10,000 என்ற கணக்கில் ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் மதுரை கலெக்டர் ஆபீசில் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து பூல்பாண்டியன் கூறுகையில், ” நான் இளைஞராக இருக்கும் பொழுது ஒரு நண்பர் எனக்கு வேலை வாங்கித் தருவதாக கூட்டிச்சென்று ஏமாற்றிவிட்டார். இதனால் சாப்பாட்டிற்கு என்ன செய்வது என்று யோசித்த நான் கோவில்களில் யாசகம் பெற்று வந்தேன். சாப்பாட்டிற்கு போக மீதமுள்ள பணத்தை பள்ளிகளில் நிவாரண உதவியாக கொடுத்து வந்தேன். அதன் பின் மார்ச் மாத தொடக்கத்தில், அதாவது கொரோனா காலகட்டத்தில் மதுரைக்கு சென்று அங்குள்ளவர்களிடம் யாசகம் பெற்று மீதம் இருக்கும் பணத்தை கொரோனா நிவாரண உதவியாக மதுரை கலெக்டர் ஆபீசில் வழங்கி வந்தேன்.
இவ்வாறு 8வது முறையாக நான் நிவாரண உதவி வழங்க சென்றுவிட்டு வந்த பொழுது சுதந்திர தினத்தை முன்னிட்டு எனக்கு சிறந்த சமூக சேவகர் என்ற விருது வழங்க மதுரை கலெக்டர் மூலம் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் அது எனக்கு தெரியாது. அதன்பின் 9 வது முறையாக நான் சென்ற பொழுது கலெக்டர் எனக்கு அந்த விருதை வழங்கி பாராட்டினார். நான் விருதுக்காகவோ அல்லது பாராட்டிற்காகவோ இந்த சேவையை செய்யவில்லை என்னால் முடிந்ததை நான் செய்கிறேன். இதனால் மற்றவர்கள் என்னை மதிக்கிறார்கள் இதனால் எனக்கு புண்ணியம் கிடைக்கிறது. எனக்கு யாசகம் கொடுக்கும் அவர்களுக்கும் புண்ணியம் கிடைக்கிறது. மேலும் இந்த தர்ம உதவி என் தலையை காக்கும் என்ற நம்பிக்கையில் என் பணியை தொடர்ந்து செய்து வருகிறேன். தற்போதுவரை 1,10,000 நிதி உதவியாக வழங்கியுள்ளேன். மேலும் பேருந்துகள் சரியாக ஓடத் தொடங்கியதும் வேறு மாவட்டத்திற்கு சென்று விடுவேன்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.