விரைவில் சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில் அனைத்து கட்சிகளும் படு தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. கூட்டணிக்குள் குழப்பம், உட்கட்சி பூசல், கட்சி மாறுதல் போன்ற பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் தமிழகத் தேர்தல்களம் மாறி வருகிறது. இந்நிலையில் கோவையில் மு.க.அழகிரிக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்களால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திமுக தலைவராக பொறுப்பு வகித்த மு.கருணாநிதி காலத்திலேயே மு.க.அழகிரி திமுகவிலிருந்து ஓரங்கட்டபட்டார். மு.க.ஸ்டாலினை முன்னிறுத்தியே கட்சி இயங்கிவந்தது.
திமுக தலைவர் மு.கருணாநிதி மறைவிற்கு பிறகு கட்சியில் இணைய மு.க.அழகிரி முயன்று வந்தார். தன் மகனுக்கு முரசொலி அறக்கட்டளையில் பொறுப்பு கொடுத்தால் போதும் என்றளவிற்கு கோரிக்கை வைத்தார். ஆனால் மு.க.ஸ்டாலின் அந்த கோரிக்கைக்கு எவ்வித பதிலும் தெரிவிக்காத நிலையில் கட்சியிலிருந்து முற்றிலும் ஒதுங்கி இருந்தார். விரைவில் நடக்க இருக்கும் தேர்தலையொட்டி தமிழகத்தில் வெளிவரும் சமீபகால நிகழ்வுகளில் மு.க.அழகிரி திமுகவுக்கு எதிராக கருத்துகள் தெரிவித்து வருகிறார்.
தமிழக தென்மாவட்டங்களில் செல்வாக்குடன் இருந்து வரும் மு.க.அழகிரிக்கு திமுக அதிருப்தியாளர்களுடன் தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் கோவையில் பல பகுதிகளில் மு.க.அழகிரி சம்பந்தமாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது, அதில், உண்மை தொண்டர்களின் உணர்வுகளை உயிரூட்ட தலைமை ஏற்க வா, அஞ்சா தலைவா என்று அழகிரியின் படமும், கருணாநிதியின் படமும் அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்களை கண்ட திமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுப் போன்ற போஸ்டர்களை கோவையில் ஒட்டியது யார் என்ற தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது திமுக.