இலங்கையில் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும் எண்ணெய் கப்பலை அணைப்பதற்கு இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான மூன்று கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பனாமா நாட்டிற்கு உரிமையான ‘ நியூ டைமண்ட்’ என்ற கப்பல் குவைத்தில் இருந்து மாலுமிகள் மற்றும் பொறியாளர்கள் என 23 ஊழியர்களுடன் கச்சா எண்ணையை ஏற்றுக்கொண்டு இந்தியாவிற்கு வந்து கொண்டிருந்தது. அந்தக் கப்பல் நேற்று இலங்கையின் கிழக்கு கடற்பகுதியில் வந்து கொண்டிருந்தபோது கப்பலின் என்ஜின் பகுதியில் திடீரென தீப்பற்றியது. அதன்பிறகு கப்பல் முழுவதும் தீ வெகுவாகப் பரவியது. இலங்கை கடற்படையின் 4 கப்பல்கள் மற்றும் இலங்கையின் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரஷ்ய போர்க் கப்பல்கள் அனைத்தும் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன.
கப்பலில் இருந்த 19 ஊழியர்கள் உயிர்காக்கும் படகுகள் மூலமாக பாதுகாப்பாக வெளியேறினர். அவர்கள் அனைவரையும் இலங்கை கடற்படை கப்பல்கள் மீட்டன. கப்பலில் இருந்த கேப்டன் உள்ளிட்ட மூன்று பேர் பத்திரமாக இருப்பதாக இலங்கை கடற்படை கூறியுள்ளது. மற்றொரு ஊழியர் மாயமான நிலையில், அவரைத் தேடும் பணி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கு இலங்கை அரசு இந்தியாவின் உதவியை நாடியுள்ளது. அதனால் இந்திய கடலோர கடற்படைக்கு உரிமையான சவுரியா, சரங் மற்றும் சமுத்திர ஆகிய மூன்று கப்பல்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. அதுமட்டுமன்றி டோர்னியர் விமானம் ஒன்று தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்காக இலங்கைக்கு விரைந்து சென்றது.