வடகொரியா நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்படும் நீர்மூழ்கி ஏவுகணைப் சோதனைக்கு தயாராகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக நாடுகள் முழுவதும் கொரோனா தொற்றால் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், வடகொரியா நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவக்கூடிய நீர்மூழ்கி ஏவுகணை சோதனைக்கு தயாராகி கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது தொடர்பான செயற்கைக்கோள் படங்களை அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். மேலும் அவர்கள் வடகொரியாவின் சின்போ கப்பல் தளத்தில் அதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து கொண்டிருப்பதாக கூறியுள்ளனர். இருந்தாலும் அது பராமரிப்பு பணியாக கூட இருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆனால் கண்டிப்பாக ஏவுகணை சோதனை செல்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறியுள்ளனர். அதுமட்டுமன்றி சின்போ கப்பல் தளத்திற்கு அருகாமையில் நீர்மூழ்கி கப்பல் ஒன்று நங்கூரமிட்டு இருப்பது அதிகாரிகளின் சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது. எப்போதும் சின்போ கப்பல் தலத்திற்கு அருகில் நீர்மூழ்கி கப்பல் ஒன்று பாதுகாப்பிற்காக நடமாடும். ஆனால் தற்போது இரண்டு நீர்மூழ்கி கப்பல் ஒரே நேரத்தில் தென்படுவது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
வட கொரியா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் புகுக்சோங்-3 என்ற நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவ கூடிய ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்தது. கடந்த 2018 ஆம் ஆண்டு வட கொரியா அதன் அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை திட்டங்கள் பற்றி அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தையில் நுழைந்தது. அதனால் அந்த ஏவுகணை சோதனையானது ஆய்வாளர்கள் மத்தியில் மிகுந்த ஆத்திரமூட்டும் செயலாக கருதப்பட்டது.