முகக் கவசம் அணியாதவர்களுக்கு வினோதமாக தண்டனை கொடுத்த நிலையில் விமர்சனங்களால் அந்த தண்டனை முறை நிறுத்தப்பட்டுள்ளது.
உலக நாடுகள் பலவற்றிலும் கொரோனா பரவி வருவதால் பொது இடங்களுக்கு செல்லும் போது முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. அவ்வகையில் இந்தோனேஷியாவிலும் இதே விதிமுறைகள் விதிக்கப்பட மீறுபவர்களுக்கு வித்தியாசமான முறையில் தண்டனை கொடுக்கப்படுகின்றது. இந்தோனேசியாவின் தலைநகரான ஜகர்த்தாவில் முக கவசம் அணியாதவர்களை பிடித்து சவப்பெட்டியில் படுக்க வைக்கின்றனர். அவர்கள் செய்யும் தவறு எவ்வளவு பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்பதை அவர்கள் உணர்வதற்காக இவ்வாறு காவல் அதிகாரிகள் செய்கின்றனர்.
கடந்த புதன் மற்றும் வியாழன் கிழமைகளில் காவல் அதிகாரிகளிடம் சிக்கியவர்களுக்கு இந்த வினோத தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு முகக்கவசம் அணியாதவர்கள் சமூக சேவை செய்வது மற்றும் அபராதம் செலுத்துவது போன்ற தண்டனைகளையும் அனுபவிக்க வேண்டியுள்ளது. இதுகுறித்து காவல் அதிகாரியான பாஸ்கல் என்பவர் கூறுகையில், “குற்றவாளிகள் அவர்களாகவே அபராதம் செலுத்துவதற்கும் சவப்பெட்டியில் படுப்பதற்கு அல்லது சமூக சேவையை செய்வதற்கு விருப்பத்தை தெரிவிக்கின்றனர். ஒருவேளை சமூக சேவை செய்வதை அவர்கள் தேர்ந்தெடுத்தால் ஒரு மணிநேரம் பொது வசதிகளை சுத்தம் செய்ய வேண்டும்.
அபராதம் செலுத்துவதை எதற்காக தேர்ந்தெடுக்கவில்லை என கேட்டால் அவர்களிடம் பணம் இருப்பதில்லை” என கூறியுள்ளார். இவ்வாறு கொடுக்கப்பட்ட தண்டனைக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து விமர்சனங்கள் எழுந்ததால் கடந்த வெள்ளிக்கிழமை இந்த தண்டனை நிறுத்தப்பட்டது. அதோடு ஜகர்த்தாவில் இருக்கும் மற்ற மாவட்டங்களில் கொரோனா குறித்த விழிப்புணர்வை உருவாக்க இறப்பு சதவீதம் கொண்ட சிறிய சவப்பெட்டி நினைவுச் சின்னங்களாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.