திரையரங்குகளை மீண்டும் திறப்பது குறித்து வரும் எட்டாம் தேதி ஆலோசனை நடத்தவிருந்த மத்திய அரசு, தென்னிந்தியத் திரைப்பட உரிமையாளர்களைப் புறக்கணித்து.
இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. கொரோனா தடை உத்தரவு காரணமாக வழிபாட்டு தலங்கள், பொழுதுபோக்கு மையங்கள் என அனைத்து இடங்களும் மூடப்பட்டிருந்தன. இந்த நிலையில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வழிபாட்டுத்தலங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட இடங்கள் திறக்கப்பட்டுள்ளன.
ஆனால் திரையரங்குகள் திறக்கப்படாமலுள்ள நிலையில் அது குறித்து வரும் எட்டாம் தேதி ஆலோசனை நடத்த திரையரங்க உரிமையாளர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. மத்திய உள்துறை செயலாளர் காணொலிக் காட்சியின்மூலம் இந்த ஆலோசனையை நடத்தவுள்ளார்.
இதற்கு மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், குஜராத், மஹாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்த திரையரங்கு உரிமையாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். ஆனால் தென்னிந்தியாவைச் சேர்ந்த உரிமையாளர்கள் ஒருவர்கூட அழைக்கப்படவில்லை. இதற்கு திரைப்பட இயக்குனர் திரு விஜய் டி ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆண்டுக்கு சில படங்கள் மட்டுமே எடுக்கப்படும் குஜராத் மாநிலத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் 800-க்கும் அதிகமான படங்களை எடுக்கும் தென்னிந்திய திரையுலகம் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
இந்த எதிர்ப்பைத் தொடர்ந்து தமிழக திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த திருப்பூர் திரு சுப்பிரமணியத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதேபோல் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில், தென்னிந்திய ஃபிலிம் பேப்பர், கர்நாடகா ஃபிலிம் சேம்பர், தெலுங்கானா ஃபிலிம் சேம்பர் உள்ளிட்டவர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.