உத்தமபாளையம் அருகே 10 கிலோ கஞ்சாவை கடத்தி சென்ற இரண்டு நபர்களில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
உத்தமபாளையம் அருகே இருக்கின்ற அனுமந்தன்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் முனியம்மாள் மற்றும் காவல்துறையினர் சிலர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரண்டு நபர்கள் போலீசாரை கண்டவுடன் தப்பி ஓடினர். அவர்களைக் கண்ட காவல்துறையினர் விரைந்து சென்று இருவரையும் பிடிக்க முயன்றனர். ஆனால் ஒருவர் மட்டுமே சிக்கினார். மற்றொரு நபர் கையில் வைத்திருந்த பையை தூக்கி வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டார். பிடிபட்ட நபரிடம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அந்த நபர் கம்பம் வடக்கு பட்டியை சேர்ந்த 34 வயதுடைய மனோகரன் என்பதும் தப்பிச் சென்ற நபர் அதே பகுதியை சேர்ந்த சிவா என்பதும் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சிவா வீசி எறிந்த பையை காவல்துறையினர் சோதனை இட்டனர். அப்போது அந்தப் பையில் இருந்த 10 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுபற்றி உத்தமபாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மனோகரனை கைது செய்துள்ளனர். அந்த நபர் மீது ஏற்கனவே 2 கொலை வழக்குகள் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட கஞ்சா கடத்தல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. மேலும் தப்பி ஓடிய சிவாவை காவல்துறையினர் வலைவீசி தீவிரமாக தேடிக் கொண்டிருக்கின்றனர்.