அருணாச்சல பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஐந்து வாலிபர்கள் சீன ராணுவத்தினரால் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அருணாச்சல பிரதேச மாநிலம் மேல் சுபன்சிரி மாவட்டத்தில் சீனா எல்லை அருகே இருக்கின்ற நசோ பகுதியை சார்ந்த கிராமத்து இளைஞர்களை 5 பேர் சீன ராணுவத்தினரால் கடந்த வெள்ளிக்கிழமை கடத்திச் செல்லப்பட்டனர். அவர்கள் 5 பேரும் இந்திய ராணுவத்திற்கு சுமை தூக்குபவர்களாகவும், வழிகாட்டிகளாகவும் இருந்து வந்தனர். அவர்கள் வேட்டையாட காட்டுக்குள் சென்றிருந்தபோது சீன ராணுவத்தினரால் அவர்கள் கடத்தப்பட்டதாக அவர்களுடன் சென்று வீடு திரும்பிய இரண்டு இளைஞர்கள் கூறியுள்ளனர். அந்த சம்பவம் பற்றி ஐந்து பேரின் குடும்பத்தினர் சமூகவலைத்தளங்களில் அதனை பதிவிட்டனர்.
அதனால் அருணாச்சலப் பிரதேசம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் பற்றி அருணாச்சல கிழக்குத் தொகுதி எம்பி மற்றும் மத்திய மந்திரியான கிரண், சீன ராணுவத்துக்கு ‘ஹாட்லைன்’ மூலமாக இந்திய ராணுவம் செய்தி அனுப்பி இருப்பதாகவும், ஆனால் சீன ராணுவத்தினர் தற்போது வரை அதற்கு பதில் அளிக்கவில்லை எனவும் கூறியுள்ளார். சீன ராணுவத்தினர் தொடர்ந்து ஆட்களை கடத்திச் செல்வதாக அனைத்து அருணாச்சல மாணவர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு டாரு குஸ்சார் கூறுகையில், ” இந்த சம்பவம் பற்றி கிராம மக்கள் எவரும் போலீஸ் மற்றும் ராணுவத்தினரிடம் முறைப்படி புகார் எதுவும் கொடுக்கவில்லை. உள்ளூர் வட்டாரங்கள் மூலமாகவே இந்த செய்தி எங்களுக்கு தெரிய வந்தது. தகவலை உறுதி செய்வதற்கு முயன்று கொண்டிருக்கிறோம். அந்த இளைஞர்கள் தற்போது எங்கே இருக்கிறார்கள் என்ற தகவல் எதுவும் தெரியவில்லை” என்று அவர் கூறியுள்ளார். இதனைப் போன்றே சீன ராணுவத்தால் கடந்த மார்ச் மாதம் கடத்தப்பட்ட 21 வயது வாலிபர் 19 நாட்களுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டார்.