நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவன் விக்னேஷ் தற்கொலை செய்து கொண்டது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து பல மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை முடிவுகளை மேற்கொண்டு வருகின்றனர். காரணம், நீட் தேர்வு மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடிய தேர்வாக அமைந்திருப்பதாகவும், ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கனவை பாழாக்கும் விதமாக இருப்பதாகவும் கல்வியலாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அரியலூர் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவன் விக்னேஷ் தற்போது தற்கொலை செய்து கொண்டது தமிழ்நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், நான் ‘நாட்டோரே, நல்லோரே, நன்மக்களே’ நீட் என்பது தேர்வா? பிள்ளைகளை பழிவாங்கும் பலிபீடமா? வருங்கால செல்வங்கள் நீட் என்ற பெயரால் பலி கொடுக்கப் படுவதை தடுக்க உங்கள் குரல் அழுத்தமாக ஓங்கி ஒலிக்கட்டும் #BanNEET என நீட் தேர்வுக்கு எதிராக பதிவிட்டுள்ளார்.