பிற மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு பயணிக்க விரும்பும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கூடுதல் பேருந்துகளை இயக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரதுறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இது ஒருபுறமிருக்க, கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு பெரும்பகுதி கை கொடுத்தாலும், அதனை நீண்ட காலம் நீட்டிக்க முடியாத பட்சத்தில், தற்போது ஊரடங்கில் தளர்வுகளை ஏற்படுத்தி தமிழக அரசு பல அனுமதிகளை அளித்துள்ளது. அந்த வகையில், போக்குவரத்திற்கு தமிழக அரசு தளர்வுகளை அறிவித்தது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.
இந்நிலையில் அரசு விரைவு பேருந்துகளில் தினமும் 5 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து வருவதன் காரணத்தினால் கூடுதலாக பேருந்துகளை இயக்க அரசு அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கும் பயணிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கூடுதல் பேருந்துகளை இயக்க அரசு தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.