உத்திரபிரதேசத்தில் கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி நகைக் கடைக்குச் சென்ற கொள்ளையர்கள் துப்பாக்கியை காட்டி பணம் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் அலிகார் நகரில் பிரபலமான நகை கடை உள்ளது. நேற்று வழக்கம்போல் கடைக்கு மாஸ்க் அணிந்து வந்த மூன்று இளைஞர்கள் கடை முன்பாக நின்றிருந்த ஊழியரிடம் தங்களை கைகளைக் காட்டி சானிடைசரால் சுத்தப்படுத்திக் கொண்டனர். திடீரென அடுத்த நொடியில் அந்த இளைஞர்களில் ஒருவன் தான் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை காட்டி கடை ஊழியர்களை மிரட்டினார்.
பின்னர் கடை முன்பாக டேபிளில் வைக்கப்பட்டு இருந்த நகைகள், இரும்பு பீரோவில் வைக்கப்பட்டிருந்த பணத்தை கொள்ளையடித்து எந்தவித பதற்றமும் இன்றி அங்கிருந்து தப்பினர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் நகைக்கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.