நெல் பயிரிடலில் போதிய வேலை ஆட்கள் இல்லாத காரணத்தால் இயந்திரங்கள் உதவியுடன் பணிகள் நடைபெறுவதாக வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 10 ஆண்டுகள் வரை காவேரி நீர் பாசன மாவட்டங்களில், மாடுகளில் ஏர்பூட்டி உழுதது, ஆட்களே கைகளால் நாற்றுக்களைப் பிடுங்கி நட்டது, களைபறித்தது, பன்னரிவாள் கொண்டு கதிர்களை அறுத்துக் கட்டிக் கால்நடையாகத் தலையில் சுமந்து கொண்டு சென்று களத்தில் சேர்த்தது, கதிர்களைக் களத்தில் அடித்து நெல்லை பிரித்தெடுத்தது, வைக்கோலைக் காயப்போட்டுக் கட்டுகளாகக் கட்டியது போன்ற பல வேலைகளை நெல் பயிரிடலில் ஆட்களைக் கொண்டே செய்து வந்தது ஒரு காலம்.
ஆனால் தற்பொழுது கடந்த பல ஆண்டுகளாக வறட்சியால் வேளாண் பணிகள் பாதிக்கப்பட்டு விட்டதால் தொழிலாளர்கள் வேலைவாய்ப்புத் தேடி நகர்ப்புறங்களுக்கு சென்றுவிட்டனர். இதனால் நடவு, களை பறித்தல் ஆகிய பணிகளுக்குக் கூலியாட்கள் போதிய எண்ணிக்கையில் கிடைப்பதில்லை. இதனால், தற்பொழுது உள்ள சூழ்நிலையை தாக்குபிடிக்க நவீன இயந்திரங்களின் உதவியுடன் பணிகளை விரைந்து முடிக்கவும், செலவைக் குறைக்கவும் முடியும் என விவசாயிகளும் வேளாண்துறை அதிகாரிகளும் தெரிவிக்கின்றனர்.