நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் 1,17,990 மாணவ மாணவியர் தேர்வு எழுதுகின்றனர்.
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றிருக்க வேண்டிய நீட்தேர்வு கொரோனா வைரஸ் பொதுமுடக்கம் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் நீட் தேர்வில் மேலும் தள்ளிவைக்க வேண்டுமென பல்வேறு மாநில அரசுகள் விடுத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
திட்டமிட்டபடி இன்று தேர்வு நடத்தப்பட வேண்டுமென உச்சநீதிமன்றம் தெரிவித்துவிட்டது. இதனை தொடர்ந்து நேசனல் டெஸ்டிங் ஏஜென்சி எனப்படும் தேசிய தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்தபடி நாடு முழுவதும் இன்று நீட் தேர்வை நடத்துகிறது. இதற்காக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. நாடு முழுவதும் 3,842 மையங்களில் நடைபெறும் தேர்வில், 16 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, மதுரை, சேலம், நெல்லை உட்பட 14 நகரங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது. தமிழகத்தில் 1,17,990 மாணவ மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். முதன்முறையாக திருப்பூரிலும் நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. கூலிபாளையம் நால்ரோடு பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு அறைக்கு 12 நபர்கள் என மொத்தம் 1,080 பேர் இந்த மையத்தில் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு எழுதுவோர் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.